இந்திய நிகழ்வுகள்
பிரணாப் முகர்ஜி - காலமானார்
- முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் (வயது 84). புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகா்ஜி தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து, நினைவு திரும்பாமலேயே இன்று அவரது உயிர் பிரிந்தது.
- 7 நாள் துக்கம் அனுசரிப்பு: பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- பிரணாப் முகர்ஜி (1935-2020): பிரணாப் முகர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள மிரடி எனும் சிறு கிராமத்தில் 1935-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பிறந்தார். அரசியல், வரலாறு மற்றும் சட்டத் துறையில் பட்டங்கள் பெற்றவர்.
- காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பிரணாப், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பல்வேறு துறைகளில் பதவிகளை வகித்தவர்.
- ஆசிரியர், பத்திரிகையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என பன்முகத் திறன் கொண்டவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு பிரணாப் கல்லூரிப் பேராசிரியராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
- 5 முறை மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். 1982-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசில் நிதியமைச்சராக பதவி வகித்தவர். 47 வயதில் மத்திய நிதியமைச்சர் பொறுப்பை பிரணாப் ஏற்ற போது, நாட்டின் மிக இளம் வயது நிதியமைச்சர் என்ற பெருமையும் பிரணாப்புக்குக் கிடைத்தது.
- 2009-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மீண்டும் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
- நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிரணாப் முகர்ஜி, 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரை நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.
- 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட பிரணாப் முகர்ஜிக்கு 2008-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
- 2019-ஆம் ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி மோடி தலைமையிலான மத்திய அரசு கௌரவித்தது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - அரசு மருத்துவர்களுக்கு சலுகை
- முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மாநில அரசுகள் அளிக்கும் இட ஒதுக்கீட்டு சலுகைகளை தடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம்
- குறிப்பிட்டுள்ளது.
- மலை கிராமப்பகுதிகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தமிழக அரசு வழங்கும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தொடர்ச்சியாக 18 அமர்வுகள் நடத்தப்பட உள்ளது.
விருதுகள்
இரு தேசிய தேசிய விருதுகள் வென்ற ஹைதராபாத் சர்வதேச விமான நிலையம்
- ஜி.எம்.ஆர் நிறுவனத்தால் இயக்கப்படும் ஹைதராபாத் இராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், "தேசிய எரிசக்தி தலைமை" மற்றும் "சிறந்த எரிசக்தி திறன் பிரிவு" ஆகிய இரு தேசிய விருதுகளை வென்றது. ஆகஸ்ட் 28-அன்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) மற்றும் கோத்ரேஜ் பசுமை வணிக மையம் (GBC) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறந்த எரிசக்தி நிர்வாகத்திற்கான 21-வது தேசிய விருது வழங்கும் விழாவில் இவ்வருதுகள் வழங்கப்பட்டன.
மாநாடுகள்
சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம் - இராணுவம்-2020
- இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "இராணுவம்-2020" (Army-2020) என்ற ஆறாவது சர்வதேச இராணுவ-தொழில்நுட்ப மன்றம், 2020
- ஆகஸ்ட் 23-29 வரை ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது, சர்வதேச காங்கிரஸ் மற்றும் கண்காட்சி லிமிடெட் (ஐசிஇ லிமிடெட்) ஆல் இயக்கப்படுகிறது.
- இந்த மன்றத்தை முன்னிட்டு, இந்திய பெவிலியன் திறக்கப்பட்டது, இதில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் டி.பாலா வெங்கடேஷ் வர்மா பங்கேற்றார்.
- ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றில் 3 டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து உலகளாவிய இராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் இடையே இம்மன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றது.
ஆசியான்-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்-2020
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் 17-வது ஆசியான்-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் (ASEAN-India Economic Ministers Consultations) ஆகஸ்ட் 29-அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றனது. இதில் வர்த்தகம். கைத்தொழில், ரயில்வே அமைச்சர் பியூஷ் வேத்பிரகாஷ் கோயல் மற்றும் வியட்நாம் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் டிரான் துவான் அன் பங்கேற்றனர்.
பிரிக்ஸ் விளையாட்டு அமைச்சர்கள் மாநாடு 2020
- இரஷ்யாவின் தலைமையில் முதலாவது விளையாட்டு அமைச்சர்களின் மாநாடு (BRICS Sports Ministers Meet) காணொலி காட்சி மூலம் ஆகஸ்ட் 25-அன்று நடந்தது. இதில் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- பிரிக்ஸ் கூட்டமைப்பு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளை கொண்ட அமைப்பாகும்.
பொருளாதார நிகழ்வுகள்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (-23.9%) சரிவு
- 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எதிர்மறையான போக்கில் -23.9 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது.
- முதல் காலாண்டு தொடக்கத்தில் 3.1 சதவிகிதமாக இருந்த ஜிடிபி, கரோனா பொது முடக்கம் காரணமாக இந்தப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
- மத்தியப் புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.
- இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளாதார நிலைமை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 1996-இல் காலாண்டு ஜிடிபி விவரங்களை வெளியிடத் தொடங்கியதிலிருந்து, இதுதான் மிகவும் மோசமான வீழ்ச்சியாகும்.
- ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் ரஷியாவின் பொருளாதாரம் -8.5 சதவிகிதத்துக்கு சரிந்துள்ளது. ஆனால், சீனா 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
- சீனாவில் கரோனா உச்சத்திலிருந்த ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் -6.8 சதவிகிதத்துக்கு சரிந்தது.
நியமனங்கள்
லெபனானின் புதிய பிரதமர் முஸ்தஃபா ஆதிப்
- லெபனானின் புதிய பிரதமராக முஸ்தஃபா ஆதிப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
- தலைநகர் பெய்ரூட்டில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிகழ்ந்த வெடிவிபத்து சம்பவத்தால், ஹசன் தியாப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அழுத்தம் காரணமாக ஆகஸ்ட் 11-ம் தேதி ஹசன் தியாப் தலைமையிலான அரசு ராஜிநாமா செய்தது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
செங்கல்பட்டில் அமையும் சாயி பல்கலைக்கழகம்
- தமிழக முதல்வர் பழனிசாமி ஆகஸ்ட் 31-அன்று தலைமைச் செயலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் 103.07 ஏக்கர் பரப்பளவில் புதிதாக நிறுவப்படவுள்ள சாயி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்டமாக, சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சாயி பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகக் கட்டடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு நிகழ்வுகள்
செஸ் ஒலிம்பியாட் 2020: இந்தியா & ரஷியா கூட்டாக சாம்பியன்
- இணைய செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியாவும் ரஷியாவும் கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- அரையிறுதிச் சுற்றில் போலந்தை வீழ்த்திய இந்திய அணி, இறுதிச்சுற்றில் ரஷியாவுடன் மோதியது. விதித் குஜ்ராத்தி (கேப்டன்), விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பி, ஹரிகா, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, திவ்யா தேஷ்முக் போன்றோர் இறுதிச்சுற்றில் கலந்துகொண்டார்கள்.
- இந்தப் போட்டி தொழில்நுட்ப காரணங்களுக்காக இரண்டாவது சுற்றில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா-ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
- இதன்மூலம் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2020
- கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் ஆகஸ்டு 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது.
- நடப்பு சாம்பியன்கள்: இரபெல் நடால் ( ஸ்பெயின்), பியான்கா (கனடா).
- செரீனாவில்லியம்ஸ்: 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இதில் வெற்றி பெற்றால், அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்தவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார்.
பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ் 2020 - லூயிஸ் ஹாமில்டன் முதலிடம்
- பெல்ஜியத்தில் நடந்த, பார்முலா 1 பந்தயத்தின் பகுதியான 2020 பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன் (பிரிட்டன்) முதலிடம் பெற்றுள்ளார்.
- இது 2020-ஆம் ஆண்டு பார்முலா 1 பந்தயங்களில் லூயிஸ் ஹாமில்டன் பெற்ற 5-வது வெற்றியாகும்.
ஆளுமைகள்
பிரசாந்த் பூஷன்
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியையும் விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆகஸ்டு 14-ம் தேதி அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
- தீர்ப்பில் "அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் மறுக்கப்படாது. ஆனால், அதே நேரத்தில் மற்றவர்களின் உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கிறோம், என தெரிவிக்கப்பட்டது.
- பிரசாந்த் பூஷனின் வழக்கறிஞர் ராஜீவ் தவான், பிரசாந்த் பூஷன் சார்பில் ஒரு ரூபாயை அபராதமாகச் செலுத்தினார்.
- வழக்கின் பின்னணி: 2020 ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று விமர்சித்தார். நீதித்துறை குறித்தும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.
டாக்டர்.பத்மாவதி சிவராமகிருஷ்ணா
- இந்திய இருதயத்துறையின் தாய்: கரோனாவால் பாதிக்கப்பட்ட 103 வயதான இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் டாக்டர்.பத்மாவதி சிவராமகிருஷ்ணா தனது ஆகஸ்டு 30-அன்று உயிரிழந்தார்.
- இந்திய இருதயத்துறையின் தாய் என அழைக்கப்படும் பத்மாவதி சிவராமகிருஷ்ணா 1917ஆம் ஆண்டு தற்போதைய மியான்மரில் பிறந்தவர். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1942ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குடியேறினார். ரங்கூனில் பட்டம் பெற்ற அவர் தனது உயர்படிப்புகளை வெளிநாடுகளில் பயின்றார்.
- இந்தியா திரும்பியதும், தில்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
- 1962 ஆம் ஆண்டில், டாக்டர்.பத்மாவதி அகில இந்திய இதய அறக்கட்டளையை நிறுவி, 1981 ஆம் ஆண்டில் தேசிய இதய நிறுவனத்தை நவீன இதய மருத்துவமனையாக அமைத்தார்.
- இந்தியாவில் இருதயவியல் வளர்ச்சியில் அவர் செய்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக, 1967 இல் பத்ம பூஷண் மற்றும் 1992 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தினங்கள்
உலக கடித தினம் - செப்டம்பர் 1
- உலக கடித தினம் (World Letter Writing Day) செப்டம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்கின் என்பவர் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
பூலித்தேவன் 305-வது பிறந்த நாள் விழா - செப்டம்பர் 1
- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும் செவலில், செப்டம்பர் 1-அன்று 305-வது பூலித்தேவன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
Download this article as PDF Format