சென்னை தினம் - ஆகஸ்டு 22 - தகவல் தொகுப்பு
- சென்னை மாநகரம் தோற்றுவிக்கப்பட்ட தினம் சென்னை தினமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-அன்று கொண்டாடப்படுகிறது. 2020 ஆகஸ்ட் 22-அன்று தனது 381- ஆம் ஆண்டு தினத்தை கொண்டாடியது.
- நடராஜ், ஐ.பி.எஸ். சட்டமன்ற உறுப்பினர், 2019 ஆகஸ்ட் 22-அன்று தினத்தந்தியில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் போட்டித்தேர்வு & அறிவு தேடலுக்கான இங்கே பகிரப்படுகிறது.
கிழக்கிந்திய கம்பெனி (1600)
- 1599-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் ஒரு பவுண்ட் மிளகின் விலையை ஐந்து ஸ்டெர்லிங்க் உயர்த்த, லண்டனில் உள்ள வர்த்தக மையத்தில் வியாபாரிகள் கூடி விலை உயர்வை எதிர்த்து கிழக்கு நாடுகள் செல்வத்தை தாமே திரட்ட முடிவெடுத்து 1600-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிழக்கிந்திய கம்பெனி நிறுவினார்கள்.
- முதலில் மசூலிபட்டினத்தில் தொழிற்சாலை அமைத்து வியாபாரம் தொடங்கினர்.
ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ்டே
- போட்டி அதிகமாக இருந்ததால் சோழ மண்டலத்தில் வேறு இடம் தேடும் பொறுப்பை கம்பெனி அதிகாரிகள் ஆண்ட்ரூ கோகன், பிரான்சிஸ்டே எடுத்துக் கொண்டு வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக் பட்டம் பெற்ற ஆளுநர்கள் டாமர்லா வெங்கடப்பா, அய்யப்பாவிடமிருந்து மதராஸ் பட்டணம் என்ற கடற்கரை மணல் திட்டை கிரயமாக கோட்டை குடியிருப்புகள் அமைக்கவும், சுற்றுப்புற நிர்வாகம் செய்யவும் அனுமதி பெற்றனர்.
ஆகஸ்டு 22, 1639
- இந்த அனுமதி பத்திரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி எழுதப்பட்டது. இதுவே சென்னை பட்டணம் உதயமான நாள்.
மதராஸ் பட்டணம்-சென்னபட்டணம் - பெயர்கள் உருவான விதம்
- டாமர்லா சகோதரர்கள் அந்த இடத்தை தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் இருக்க வேண்டுமென்று விரும்பினர். நிலத்தின் மேற்கு பகுதியில் ரோமன் கத்தோலிக்க தலையாரி மீனவ குடியிருப்பை சேர்ந்த மதராசன் என்பவரின் வாழைத்தோப்பில் தொழிற்சாலை அமைக்க விரும்பினார். இடைத்தரகர் திம்மப்பா தொழிற்சாலைக்கு மதராஸ் பட்டணம் என்று பெயர் சூட்டப்படும் என்று தலையாரி மதராசனுக்கு வாக்குறுதி கொடுத்து வாழைத்தோப்பை வாங்கி கொடுத்ததால் மதராஸ் பட்டணம் என்ற குப்பமும், மதராஸ் பட்டணம் என்ற கோட்டையும், காலப்போக்கில் நெசவாளர்கள் குடியேறிய சுற்றியுள்ள பகுதி சென்னபட்டணம் என்று வழங்கலாயிற்று.
சென்ன கேசவ பெருமாள் கோவில்
- சென்னபட்டணம் வந்ததற்கு இன்னொரு காரணம் கோட்டை கட்டப்பட்ட இடத்தில் சென்ன கேசவ பெருமாள் கோவில் இருந்ததாகவும் அந்த இடம் அப்போதே சென்னபட்டணம் என்று இருந்ததாகவும், ஆங்கிலேயர் அந்த கோவிலை இடித்து இடிபாடுகளை உபயோகித்து கோட்டை சுற்றி பாதுகாப்பு அரண் எழுப்பினர் என்ற ஆராய்ச்சி குறிப்பு ஒன்று கூறுகிறது.
- ஆக மதராஸ் என்ற பெயரும் உள்ளூர்வாசிகள் இட்ட பெயர் சென்னை பட்டணம் என்று இருபெயர் தாங்கி நகரம் உருவானது.
புனித ஜார்ஜ் கோட்டை
- 1640-ல் பிப்ரவரி மாதம் கோட்டை மற்றும் அதனுள்ளே குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு பிரதான கோட்டை வீடு கட்டி முடிக்கப்பட்ட தினம் புனித ஜார்ஜ் தினம் என்பதால் நாளடைவில் வளர்ந்த கோட்டை புனித ஜார்ஜ் பெயர் தாங்கி அரசு அதிகாரத்தின் மையமாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
சென்னை விரிவாக்கம்
- 1676-ல் கோல்கொண்டா சுல்தானிடமிருந்து திருவல்லிக்கேணியும், மொகலாய மன்னர் ஆளுகையில் இருந்த புரசைவாக்கம், எழும்பூர், தண்டையார்பேட்டை, நவாப் தாவுத்கானிடமிருந்து நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர், சாத்தாங்காடு இணைக்கப்பட்டு சென்னை விரிவானது.
- 1749-ம் ஆண்டு சாந்தோமையும், மயிலாப்பூரை ஆங்கிலேயர் பிரான்சிடமிருந்து அபகரித்தனர். ஆந்திராவிலிருந்து தெலுங்கர்கள் பலர் சென்னைக்கு குடியேறினர். சென்னை என்ற மணல்திட்டு நகரமாக உருவெடுத்து 17-ம் நூற்றாண்டு இறுதி வரை பிரிட்டிஷாரின் பிரதான குடியிருப்பாக இருந்தது.
- 1774-ம் ஆண்டு பிரிட்டிஷார் கொல்கத்தாவை தலைநகராக கொண்டு செயல்பட தொடங்கினர். ஆயினும் முதலில் நிர்மாணிக்கப்பட்ட சென்னை நிர்வாகத்திற்கும், ஆளுமைக்கும் பல்துறைகளுக்கும் இந்தியாவிற்கு முன்னோடியாக விளங்கியது.
பழமையான முதன்மையான நகராட்சி சென்னை
- இந்தியாவிலேயே பழமையான முதன்மையான நகராட்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
- இந்திய காவல் துறை உதயமானதும் சென்னையில் தான். மதராஸ் காவல் சட்டம் 1859-ன் படி மதராஸ் போலீஸ் உருவாக்கப்பட்டதின் அடிப்படையில் மத்திய அரசு 1860-ம் ஆண்டு போலீஸ் கமிஷன் காவல் சீர்திருத்தம் செய்ய அமைத்தது.
- தமிழக காவல்துறை 1859-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே பழமையான காவல் சென்னை காவல் ஆணையம். பாந்தியன் சாலையில் உள்ள ஆணையகம் 1856-ல் போல்டர்சன் ரூ.21,000-க்கு பங்களா சொந்தக்காரர் அருணகிரி முதலியாரிடமிருந்து வாங்கி அலுவலகத்தை அமைத்தார்.
இந்தியாவின் முக்கோணவியல் அளவீடு
- புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து புனித தாமஸ் மலைக்கு ஏழு மைல் நீளமுள்ள சாலை 1796-ம் ஆண்டு அகலமாக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலை என்ற இந்த நேர்கோட்டை அடிப்படையாக வைத்து தான் இந்தியாவின் முக்கோணவியல் அளவீடு தொடங்கியது.
- இவையெல்லாம் சென்னைக்கு பெருமை சேர்ப்பவை. பிரான்சிஸ் டே சென்னையை வியாபாரதளமாக தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் ஒன்று, அப்போதே தரமான துணிகள் இருபது சதவீதம் மலிவாக கிடைத்தது. மேலும் தெற்கிலும், மேற்கிலும் கூவம், ஏலாம்பூர் ஆறுகள், கிழக்கில் கடற்கரை நல்ல பாதுகாப்பு அளிக்கும் என்பதால் குடியிருப்பும் வியாபார தளமும் அமைக்க உகந்த இடம் என்று முடிவு செய்ததில் வியப்பில்லை.
ஆயிரம் குளங்கள் கொண்ட நகரம்-சென்னை
- ஆயிரம் குளங்கள் கொண்ட நகரம் என்ற பெருமை சென்னைக்கு உண்டு என்பது பலருக்கு தெரியாது. வடக்கில் கோசஸ்தலை ஆறு, மத்தியில் கூவம் ஆறு, தெற்கில் அடையாறு ஆறு இவை நகரை மூன்றாக பிரிக்கின்றன. அடையாறு, கூவம் ஆறுகளை இணைக்கும் கால்வாய் பக்கிங்காம் கால்வாய்.
- 1876-ம் ஆண்டு கடும் பஞ்சம் தலை தூக்கியபோது நிவாரணமாக எட்டு கிலோ மீட்டர் நீள கால்வாய் கட்டுவதற்கு ட்யூக் பக்கிங்காம் என்பவரால் ஆணையிடப்பட்டது.
- பத்து மீட்டர் அகலம் கொண்ட இந்த கால்வாய் பக்கிங்காம் கெனால் என்று வடிவமைத்தவர் பெயர் தாங்கி நல்லதொரு நீர்வழி போக்குவரத்தாக பல ஆண்டுகள் மக்கள் பயன் படுத்தினர். ஆனால் இப்போது கரையோர ஆக்கிரமிப்பாலும், கழிவுநீர் சேருவதால் வயிற்றைகுமட்டும் வாடை பக்கிங்காம் கூவமாற்றின் அடையாளமாகி விட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு கூவம் ஆற்றில் எண்பது வகையான மீன் இருந்தது. இப்போது ஒரு வகை மீன் கூட உயிர் வாழமுடியாத நிலைக்கு வந்துள்ளது.
- 1720-ம் ஆண்டு கோரமான தண்ணீர் பிரச்சினையால் காலரா நோய் பரவியது. பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் மூலம் நீர் சேகரித்து சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம் 1872-ல் ஆளுநர் நேப்பியரால் தொடங்கப்பட்டது.
- சுகுன விலாஸ் கிளப் இன்றும் அண்ணா சாலையில் உள்ளது, நாடக பிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை நகரம் 1639-ல் தோன்றியது என்றாலும் மயிலாப்பூர், அல்லிக்கேணி மிக பழமையான நகரங்கள். ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரும், அப்பரும் கபாலி கோவிலில் பாடல் பாடியுள்ளனர். அரேபியர்களும் ரோமாபுரியிலிருந்தும் வியாபாரிகள் வந்ததற்கு கிரேக்க அரேபிய ஏடுகளில் மைலர்பா, மெலியாப்பூர் என்ற குறிப்புகள் உள்ளது.
- உலக திருமுறையாம் திருக்குறள் அளித்த திருவள்ளுவர் வாழ்ந்த இடம் மயிலை. ஏசு கிறிஸ்து சீடர் தாமஸ் வந்த இடம் மயிலை. மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் உள்ள ரங்கையா நாயுடு இல்லத்தில் தான் இந்திய விடுதலைக்காக போராட காங்கிரஸ் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற முடிவு 1888-ல் எடுக்கப்பட்டு, 1889-ல் ஹியூம் தலைமையில் காங்கிரஸ் உதயமானது என்பது வரலாறு.
- ‘ரிப்பன் எங்கள் அப்பன் மவுண்ட் பேட்டன் எங்கள் பாட்டன்’ என்று யார் நன்மை செய்தாலும் பாகுபாடின்றி ஒத்துழைப்பையும் அன்பையும் ஆதரவையும் தருபவர்கள் சென்னைவாசிகள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் செய்த பணியை பாராட்ட தவறியதில்லை. எல்லோரும் அமைதியாக தமது கடமையை ஆற்றுவதால் நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை.