ரூபெல்லா, தட்டம்மை நோய்களை ஒழித்த "இலங்கை மற்றும் மாலத்தீவுகள்"
- ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக சுகாதார அமைப்பு (WHO) 2020 ஜூலை 8-ஆம் தேதி இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா வைரஸை ஒழித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
- இதன் மூலம், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா வைரஸ் இரண்டையும் (Eliminate Both Rubella and Measles) வெற்றிகரமாக அகற்றிய முதல் இரண்டு நாடுகள் என்ற சிறப்பை இலங்கையும் மாலத்தீவும் பெற்றுள்ளன.
சீனாவின் அணு உலைகள்/அணுசக்தி திட்டங்கள்
- 2020 முதல் 2025 வரை ஆண்டுக்கு 6-8 அணு உலைகளை (Nuclear Reactors) உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
- 2019 மார்ச் வரை, சீனாவில் 46 அணு உலைகள் மூலம் 42.8 ஜிகாவாட் மின்சக்தியை வழங்கின. 2020 மே மாத இறுதியில், சீனாவின் அணுசக்தி திறன் 48.8 ஜிகாவாட் ஆக உயர்ந்தது. 2035-வாக்கில், சீனா அணுசக்தி சங்கம், சுமார் 200 ஜிகாவாட் அணுசக்தி திறன்களை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.
- இந்தியாவில் அணுசக்தி 2020 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் அணுசக்தி திறன் 6.7 ஜிகாவாட் ஆகும்.
- தற்போது, நாட்டில் மொத்தம் 22 அணு மின் அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 22-இல், 18 அழுத்தப்பட்ட கனரக நீர் உலைகள், 4 மென் நீர் உலைகள் ஆகும்.
இந்திய நிகழ்வுகள்
ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் - திறந்து வைப்பு
- மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், 750 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும், ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் (Asia’s largest Solar Power project) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு, 138 கோடி ரூபாயை ஒதுக்கி இருந்தது. இந்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 24 சதவீத மின்சாரம், டில்லிக்கு வினியோகிக்கப்படவுள்ளது. மீதமுள்ள, 76 சதவீத மின்சாரம், மத்திய பிரதேச மாநிலத்தில் வினியோகிக்கப்படும். 3,700 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.
- இந்த சூரிய மின்சக்தி நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை.10-அன்று வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, திறந்து வைத்தார்.
- ரேவா மாவட்டம், நர்மதை நதி மற்றும் வெள்ளை புலிகளால் அடையாளம் காணப்பட்டு வந்தது. இனி, அது, ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாவட்டமாகவும், அனைவரின் நினைவிலும் இருக்கும்.
- இந்த நிலையம் உதவும். இந்த நிலையத்தால், ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 150 கோடி கிலோ கிராம் அளவிலான, 'கார்பன் டை ஆக்சைடு' உமிழ்வு குறையும். சூரிய மின்சக்தி, இன்று மட்டுமல்லாமல், 21ம் நுாற்றாண்டு முழுதும், ஆற்றல் தேவைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்வில் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் உதவிகர நடவடிக்கை ‘மிஷன் சாகர்’
- இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலில், ‘பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி’ (Security and Growth for All in the Region) என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையைப் பின்பற்றி, இந்தியாவின் உதவியை விரிவுபடுத்துவதற்காக ‘மிஷன் சாகர்’ நடவடிக்கையை (Mission Sagar) தொடங்கியது.
- INS கேசரி கடற்படைக்கப்பல், மிஷன் சாகர் உதவி நடவடிக்கையை 2020 மே-10 ஆம் தேதி தொடங்கி ஜூன் 28 அன்றுடன், வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்து 49 நாட்களுக்குப் பிறகு இந்தியா திரும்பியது.
- மொரிஷியஸ், கொமரோஸ் தீவுகள், மடகாஸ்கர், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உதவி குழுக்கள் மற்றும் சுமார் 600 டன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்காக INS கேசரி 14000 கிலோமீட்டருக்கு மேல் (7,500 கடல் மைல்) பயணம் செய்தது.
இந்திய கடற்படையின் சமுத்ரா சேது நடவடிக்கை - தாயகம் திரும்பிய 3,992 குடிமக்கள்
- வெளிநாட்டிலிருந்து இந்திய குடிமக்களை திருப்ப அழைத்துவரும் முயற்சிக்காக, சமுத்ரா சேது நடவடிக்கை (Operation Samudra Setu), 2020 மே 5-அன்று இந்திய கடற்படையால் தொடங்கப்பட்டது.
- ஆபரேஷன் சமுத்ரா சேது நடவடிக்கை, 55 நாட்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டது, இதில் 3,992 இந்திய குடிமக்கள் இந்தியக் கடற்படையால் கடல் வழியாக தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.
- பொக்குவரத்துக் கப்பல், INS ஜலாஷ்வா, மற்றும் 3 லேண்டிங் ஷிப் டாங்கிகள்- INS ஐராவத், INS ஷார்துல் மற்றும் INS மாகர் ஆகியவ கப்பல் இந்த நடவடிக்கையில் பங்கேற்றன.
ஒடிசாவில் அரசு நிலங்களை கண்காணிக்கும் அமைப்பு ‘BLUIS’ - தொடக்கம்
- ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வர் நகரி்ல் உள்ள அனைத்து அரசு நிலங்களையும் கண்காணிக்க, இணையம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மொபைல் அடிப்படையிலான தீர்வு, ‘BLUIS’என்ற பெயரிலான "புவனேஸ்வர் நில பயன்பாட்டு புலனாய்வு அமைப்பு" 2020 ஜூலை 8-ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
- அரசாங்க நிலங்களை பாதுகாக்க விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
- புவனேஸ்வர் நில பயன்பாட்டு புலனாய்வு அமைப்பு (BLUIS) என்பது புவனேஸ்வரில் உள்ள அனைத்து அரசு நிலங்களையும் கண்காணித்து கண்டுபிடிக்கும் ஒரு புவி-குறியிடப்பட்ட களஞ்சியமாகும். இந்த முறையில் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
- மேலும்‘வழக்கு மேலாண்மை அமைப்பு’ (Litigation Management System) என்ற இணைய விண்ணப்பத்தையும் முதல்வர் தொடங்கிவைக்கப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை கண்காணிப்பதன் மூலம், வழக்கு மேலாண்மை அமைப்பு ஒரு ஸ்மார்ட் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வாகும்.
- BLUIS: Bhubaneswar Land Use Intelligence System.
உத்தரபிரதேச அரசின் "தொடக்கநிலை நிறுவன கொள்கைக-2020"
- உத்தரபிரதேச மாநிலத்தை தொடக்கநிலை நிறுவனங்களுக்காக மிகவும் உகந்த மாநிலமாக மாற்றுவதற்காக, உத்தரப்பிரதேச அமைச்சரவை 2020 ஜூலை 8-ஆம் தேதி சுயாதீனமான மற்றும் விரிவான 2020 "தொடக்கநிலை நிறுவன கொள்கைக்கு" (Startup Policy 2020) ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த தொடக்கநிலை நிறுவன கொள்கை, உத்தரபிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடக்கக் கொள்கை 2017-இன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
- உத்தரபிரதேச ‘தொடக்கக் கொள்கை’ 2018 ஆம் ஆண்டில் நிதி ஆயோக் அமைப்பின் உதவியுடன் மாநில அரசால் தயாரிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் ஆறு மூலோபாய பாலங்கள் திறப்பு
- ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில், 6 மூலோபாய பாலங்களை (Strategic Bridges) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 2020 ஜூலை 9-அன்று, காணொலி காட்சி முறையில் திறந்து வைத்தார்.
- சம்பர்க் திட்டம்: மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஆறு பாலங்களும் எல்லைச் சாலைகள் அமைப்பினால் (Border Roads Organisation) மிகவும் கடினமான வானிலை மற்றும் நிலப்பரப்புகளில், சம்பர்க் திட்டத்தின் (Project Sampark) கீழ் கட்டப்பட்டுள்ளன. கட்டப்பட்டன.
- மொத்தம் ஆறு பாலங்களில் கத்துவா மாவட்டத்தின் தர்னா நல்லா என்ற இடத்தில் 2 பாலங்களும், ஜம்மு மாவட்டத்தின் அக்னூர்-பல்லன்வாலா சாலையில், 04 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இராஜஸ்தானின் பால் பொருட்களின் தூய்மைக்கான "தூய்மை நிச்சயம்" இயக்கம்
- பால் மற்றும் பால் பொருட்களின் தூய்மையை உறுதி செய்வதற்காக, இராஜஸ்தான் அரசின் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா, 2020 ஜூலை 8 முதல் ஜூலை 14 வரை "தூய்மை நிச்சயம்" (Pure for Sure) என்ற ஒரு வாரகால பிரச்சார இயக்கத்தை 2020 ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பு/ விண்வெளி
இந்தியாவுக்கு வந்தடைந்த "போயிங் 37 இராணுவ ஹெலிகாப்டர்கள்"
- அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு ஏரோஸ்பேஸ் கம்பெனியான "போயிங் நிறுவனம்" அனைத்து 37 இராணுவ ஹெலிகாப்டர்களையும் 2020 ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு வழங்கி முடித்துள்ளது.
- 37 ராணுவ ஹெலிகாப்டரில், 22 AH-64E ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 CH-47F(I) சினூக் ரக ஹெவி-லிப்ட் ஹெலிகாப்டர்கள் ஆகும்.
- 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் கடைசி ஐந்து ஹெலிகாப்டர்கள், 2020 ஜூன் மாதம் உத்திரபிரதேச மாநிலம் ஹிந்தான் விமானப்படை நிலையத்தில் உள்ள இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட்டன, சினூக் ஹெலிகாப்டர்கள் வழங்கல் 2020 மார்ச் மாதத்தில் நிறைவடைந்தது.
Amazonia-1 - பிரேசிலின் முதல் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- பிரேசில் நாடு அமசோனியா -1 (Amazonia-1) என்ற முதலாவது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) தனது துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் (PSLV) மூலம், 2020 ஆகஸ்ட் மாதத்தில் விண்ணில் செலுத்த உள்ளது
- PSLV: Polar Satellite Launch Vehicle.
விருதுகள்
2020 யுனிஃபில் சுற்றுச்சூழல் விருது வென்ற "இந்திய பட்டாலியன்"
- லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை (UNIFIL) மிஷன் தலைவரும் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஸ்டெபனோ டெல் கோல், யுனிஃபில் 2020-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர யுனிஃபில் சுற்றுச்சூழல் விருதுகளை 7 மிஷன் நிறுவனங்களுக்கு வழங்கினார்.
- யுனிஃபில் அமைப்புடன் நிறுத்தப்பட்டுள்ள இந்திய பட்டாலியன் (INDBATT)படைக்கு முதலாவதாக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது கழிவு உற்பத்தியைக் குறைப்பதற்கான இந்திய பட்டாலியனின் திட்டத்திற்காக அறிவிக்கப்பட்டது.
- UNIFIL: United Nations Interim Force in Lebanon, INDBATT: Indian Battalion.
நியமனங்கள்
ஹாக்கி இந்தியா புதியத் தலைவர் "கியானேண்ட்ரோ நிங்கோம்பம்"
- ஹாக்கி இந்தியா (Hockey India) கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ தலைவராக மணிப்பூர் மாநிலத்தின் "கியானேண்ட்ரோ நிங்கோம்பம்" (Gyanendro Ningombam) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
காற்று மாசுபாட்டு இணையதள மதிப்பீட்டுக் கருவி -"Clean Air Counter" அறிமுகம்
- சுற்றுச்சூழல் குழுக்கள், 2020 ஜூலை 9-ஆம் தேதி "Clean Air Counter" என்ற பெயரில் ஒரு இணையதள கருவியை அறிமுகப்படுத்தின, அதன்படி இந்தியாவின் தலைநகர் புது தில்லி, 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் காற்று மாசுபாட்டிலினால் உலகில் அதிக பொருளாதார தாக்கத்தை (தனிநபர் அடிப்படையில்) கொண்டுள்ளது.
- காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்பை மதிப்பிடுவதற்கு, இந்த Clean Air Counter கருவி, உலகளாவிய நோய் தொற்று சுமை (Global Burden of Disease) குறித்த தொற்றுநோயியல் கண்காணிப்பு ஆய்வின் கீழ் வடிவமைக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்துகிறது.
புத்தக வெளியீடு
His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography - Tenzin Gyatso
- "புனிதத்தன்மை வாய்ந்ச பதினான்காவது தலாய் லாமா: உருவப்படங்களைக்கொண்ட சுயசரிதை" என்ற தலைப்பிலான, திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா அவர்களைப் பற்றிய ஆங்கிலப் சுயசரிதை புத்தகத்தை, அவரது நெருங்கிய உதவியாளர்களில் ஒருவரும், 40 ஆண்டுகளுக்கும் மேலான ஆலோசகருமான டென்சின் கீச் டெத்தோங் எழுதியுள்ளார்.
- டென்சின் கயாட்சோ என்ற இயற்பெயர் கொண்ட 14-வது தலாய் லாமாவின் மறக்கமுடியாத உருவப்படங்கள் கொண்ட சுயசரிதை புத்தகம் 2020 அக்டோபரில் ரோலி புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
நீலகிரியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டல்
- நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வா் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக ஜூலை 10-அன்று அடிக்கல் நாட்டினார்.
- தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றுள்ளது.
முதல்வர் பழனிசாமிக்கு "பால் ஹாரீஸ் பெல்லோ" கவுரவப் பட்டம்
- குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம் மற்றும் சுற்றுச்சூழலில் சிறந்த சேவை செய்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி
- ‘பால் ஹாரீஸ் பெல்லோ” என்ற கவுரவப் பட்டத்தை அமெரிக்க நிறுவனம் வழங்கியுள்ளது.
- அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு ‘தி ரோட்டரி பவுண்டேஷன் ஆப் ரோட்டரி இண்டர்நேஷனல் என்ற அமைப்பு, குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களை ‘பால் ஹாரீஸ் பெல்லோ“ என்று அழைத்து கவுரவப்படுத்தி வருகிறது.
நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களுக்கு வெண்கலச் சிலை - முதல்வர் அறிவிப்பு
- நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- நெடுஞ்செழியன் அவர்களின் பிறந்த தினமான ஜூலை 11-ஆம் நாளை அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடவுள்ளது. மேலும் நெடுஞ்செழியன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்று, அன்னார் எழுதிய "வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்" (தன் வரலாற்று நூல்) என்ற நூலை அரசுடைமையாக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- நாவலர் இரா. நெடுஞ்செழியன்: பேரறிஞர் அண்ணாவின் அன்பிற்கு பாத்திரமானவரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களின் ஒருவரும், தமிழ்நாடு அரசில் நீண்ட காலமாக அமைச்சராகவும் பணியாற்றிய நாவலர் இரா. நெடுஞ்செழியன், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் 11.7.1920-ல் பிறந்தார். சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தனது மாணவர் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
- நடமாடும் பல்கலைக்கழகம்: எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர், கருத்துவன்மையோடும், நகைச்சுவையோடும் பேசும் சிறந்த சொற்பொழிவாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாவலரின் பேச்சுத் திறனைக்கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன் சுற்றுப் பயணத்திற்கு அழைத்துச் சென்றார். பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களை பட்டி தொட்டி எங்கும் மேற்கோள் காட்டி, தன் கருத்துகளுக்கு வலு சேர்த்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவருடைய அறிவுத்திறனால், எல்லோராலும் "நடமாடும் பல்கலைக்கழகம்" என அழைக்கப்பட்டவர்.
- நாவலர் இரா. நெடுஞ்செழியன், "மாலைமணி" நாளிதழில் பொறுப்பாசிரியராகவும், "மன்றம்" என்ற இதழின் நிறுவனராகவும், "நம் நாடு" இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். "மொழிப் போராட்டம்", "தீண்டாமை", "திருக்குறளும் மனுதர்மமும்", "நீதிக்கட்சியின் வரலாறு", "பாவேந்தர் கவிதைகள்", "வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளவர்.
- "மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும், பகுத்தறிந்து பார்க்க வேண்டும், சிந்திக்க மறுப்பவன் அவனுக்கு தானே துரோகியாகிறான்," என்ற நாவலரின் பேச்சு, தமிழர்களின் நெஞ்சங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்திக்க வைத்தது.
- பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும் சிறப்பாக பணியாற்றினார். பேரறிஞர் அண்ணாவால், "தம்பி வா! தலைமையேற்க வா! ஆணையிடு, கட்டுப்படுகிறோம்" என்று வாயாற புகழப்பட்ட பெருமைக்குரியவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன். பேரறிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவையில் கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
- 1977-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பின், அக்கட்சின் அவைத்தலைவராகவும், பின்னர் பொதுச் செயலாளராகவும், பணியாற்றியவர். மேலும் இறுதி மூச்சு வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவராக இருந்தவர்.
- எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையிலும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.
- பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த போதும், எம்.ஜி.ஆர். மறைந்த போதும், இடைக்கால முதல்வராக பதவி வகித்த சிறப்புக்குரியவர்.
முக்கிய தினங்கள்
வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம் - ஜூலை 10
- இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் புரட்சி வேலூரில் நடந்தது.
- 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ந்தேதி இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்ட இந்த முதல் புரட்சி, வேலூர் சிப்பாய் புரட்சி எனப்பட்டது.
தேசிய மீன் விவசாயிகள் தினம் - ஜூலை 10
- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10-ஆம் தேதி ‘தேசிய மீன் விவசாயிகள் தினம்’ (National Fish Farmers Day), இந்திய அரசால் 2001-முதல் கொண்டாடப்படுகிறது.
- டாக்டர் எச்.எல். சவுத்ரி மற்றும் டாக்டர் கே.எச்.அலிகுன்ஹி ஆகியோரின் மீன் வளர்ப்பு பங்களிப்பை நினைவுகூரும் வகையில், ஜூலை 10 இந்தியாவில் தேசிய மீன் விவசாயிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் GLOBEFISH இன் தரவுகளின்படி, 2019 டிசம்பரில் இந்தியா உலகின் 2 வது பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தியாளராக உள்ளது. மேலும், உலகில் மீன் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11
- உலக மக்கள் தொகை தினம் (World Population Day), ஜூலை 11 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- உலக மக்கள்தொகை உச்சகட்டமாக 500 கோடியை எட்டிய நாள் 1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் ஆகும். இதை தொடர்ந்து ஆண்டுதோறும், உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
Download this article as PDF Format