TNPSC Current Affairs June 24-25, 2020 - Download as PDF

சர்வதேச நிகழ்வுகள்
ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் (ATT) இணைய 'சீனா' முடிவு 
  • சீன மக்கள் குடியரசு பன்முக ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் (ATT) சேர முடிவு செய்துள்ளது. இது சீனாவின் சட்டமன்ற விவகாரக் குழுவின் உயர்மட்ட சட்டமியற்றும் குழுவின் ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை மூன்று நாள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
  • உலகில் 53 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், உலக ஆயுதத் சந்தையில் 5.5% பங்களிப்புடன் உலகின் ஐந்தாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக சீனா உள்ளது.
  • ஆயுத வர்த்தக ஒப்பந்தம் (2013): இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் 2013 ஏப்ரல் 2-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2014 டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வந்தது. இது சர்வதேச அளவிலான ஆயுத விற்பனையை கட்டுப்படுத்தப்படுகிறது. 
  • சர்வதேச மற்றும் பிராந்திய அமைதியை பேணும் நோக்கில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது
  • ATT: Arms Trade Treaty.
அமெரிக்காவில் ‘எச்1 பி’ விசா வழங்க இடைக்கால தடை விதிப்பு
  • அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி‘, ‘எச்2 பி‘, ‘எல்‘ மற்றும் ‘ஜே‘ விசாக்கள் (H-1B Visa) வழங்குவதை இந்த 2020-ஆம் ஆண்டு இறுதி வரை நிறுத்திவைக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு 2020 ஜூன் 24 முதல் அமலுக்கு வருகிறது.
  • ‘எச்1 பி‘ விசா: அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி‘ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி‘ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும்.
இரஷ்யா, சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் - ஜூன் 24, 2020
  • இந்திய - சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நேரத்தில், இரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் (RIC Foreign Ministerial level meeting) காணொலி காட்சி மூலம் ஜூன் 24-அன்று நடைபெற்றது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இக்கூட்டத்தில் இந்தியாவிற்கான நிரந்தர இருக்கைக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
  • இரண்டாம் உலகப்போர் முடிந்து, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இரஷ்யா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 
  • இக்கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:
  • இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு நன்றி.இரண்டாம் உலகப் போரில் நாஜிப் படையினருக்கு எதிரான வெற்றியில், பல்வேறு நாடுகளுக்கும் பங்கு உள்ளது. இதில், இந்தியாவுக்கும் முக்கிய பங்கு உள்ளது. உலகின் பல இடங்களில் நடந்த போரில், இந்தியர்கள் ரத்தம் சிந்தியுள்ளனர். போர் சூழ்நிலையில், சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் தேவையான பொருட்கள் தடைபடாமல் கிடைப்பதற்கு இந்தியா மிகப் பெரிய உதவி செய்தது.
  • ஆனால், இந்தியாவுக்கு இதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடந்த, 75 ஆண்டுகளில் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான வரலாற்று அநீதி இன்னும் சரி செய்யப்படவில்லை. பல தரப்பட்ட நாடுகள் இணைந்த ஒரு கூட்டமைப்பில், ஒவ்வொரு நாடும் சர்வதேச சட்ட நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்தார்.
  • RIC: Russia-India-China
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை கலைப்பு - பொதுத்தேர்தல் அறிவிப்பு
  • சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகோப் 13-வது சிங்கப்பூர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என்ற அறிவிப்பை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் 2020 ஜூன் 23-அன்று வெளியிட்டார்.
  • உலகளாவிய கொரானா தொற்றுநோய்க்கு மத்தியில், 2020 சிங்கப்பூர் பொதுத் தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
செர்பிய நாடாளுமன்றத் தேர்தல் - அதிபர் அலெக்சந்தர் வுசிக் வெற்றி
  • உலகளாவிய கொரானா தொற்றுநோய்க்கு மத்தியில், 2020 ஜூன் 21-அன்று 'ஐரோப்பாவில் தேசிய தேர்தல்களை நடத்திய முதல் நாடாக' செர்பியா விளங்குகிறது.
  • செர்பிய அதிபர் அலெக்சந்தர் வுசிக் தலைமையிலான செர்பியா முற்போக்குக் கட்சி கூட்டணி (Serbian Progressive Party), பாராளுமன்றத்தில் மொத்தம் 250 இடங்களில் 191 இடங்களைப் பெற்று ஐரோப்பாவில் மிகப்பெரிய நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார். 
இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்து கோவில் - அடிக்கல் நாட்டல்
  • பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் கட்டப்படவுள்ள முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் 2020 ஜூன் 23-அன்று, நாட்டப்பட்டது. பாகிஸ்தான் சுதந்திரத்திற்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் கோயில் இதுவாகும்.
  • இந்த கோயில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு ஸ்ரீ மந்திர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தான் அரசின் மத விவகார அமைச்சகம் இக்கோயிலை நிர்மாணிக்க ரூ .10 கோடி செலவிடவுள்ளது. 
புதுடெல்லி பாகிஸ்தான் தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 50%-ஆக உத்தரவு
  • 2020 ஜூன் 23-அன்று, அடுத்த 7 நாட்களுக்குள், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையை 50%-ஆக குறைக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் வியன்னா மாநாட்டு விதிகளை மீறியதால் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கையையும் 50%-ஆக குறைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
இலடாக் விவகாரம்: இந்தியா-சீனா இடையே தூதரக ரீதியில் பேச்சுவார்த்தை 
  • இலடாக் மோதல் விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே தூதரக ரீதியில் ஜூன் 24-அன்று முதல் முறையாக பேச்சுவார்த்தை நடந்தது.
  • மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் நவீன் ஸ்ரீவஸ்தவா மற்றும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குனர் வு ஜியாங்காவோ ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து முன்னர் ஒப்புக்கொண்ட புரிந்துணர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவது எல்லையில் அமைதியை உறுதிப்படுத்த உதவும் என்று இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய நிகழ்வுகள்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்/முடிவுகள் - ஜூன் 24, 2020
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூன் 24-அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் (Union Cabinet) நடைபெற்றது. இதில் முடிவு எடுக்கப்பட்ட விவரங்கள்:
  • இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: அரசு வங்கிகள், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் (UCBs) இனி மத்திய ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். ரிசர்வ் வங்கி கொண்டிருக்கும் அதிகாரங்கள், இந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும், இது தொடர்பான அவசரச் சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இதன் மூலம் இந்த 1540 வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.48 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
  • AHIDF நிதி உருவாக்கம்: கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (AHIDF) அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதன் நோக்கம் கால்நடை வளர்ப்புத் துறையில் தனியார் துறை முதலீடுகளைத் அனுமதிப்பதாகும். இந்த நிதிக்கான மொத்த பட்ஜெட் ரூ .15,000 கோடி.
  • குஷிநகர் விமான நிலையம்: உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. குஷிநகர் ஒரு புத்த யாத்திரை நகரமாகும், இங்குதான் கௌதமபுத்தர் மகா பரிநிர்வாணத்தை அடைந்தார்.
  • OVL ஷ்வே ஆயில் & கேஸ் திட்டம்: மியான்மர் நாட்டில் மேற்கொள்ளப்படும், ONGC விதேஷ் லிமிடெட் நிறுவனத்தின் ஷ்வே ஆயில் & கேஸ் திட்டத்தை (Shwe Oil & Gas project) மேலும் விரிவுபடுத்துவதற்காக 909 கோடி ரூபாயை (121.27 மில்லியன் அமெரிக்க டாலர்) கூடுதலாக அளிக்க ஒப்புதல் அளித்தது.
  • விண்வெளித் துறையில் தனியார் அனுமதி: விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • IN-SPACe மையம்: இதற்காக IN-SPACe என்ற 'இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்' அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நட்பு ஒழுங்குமுறை மற்றும் ஊக்குவிக்கும் கொள்கைகள் மூலம், பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறைக்கு வழிகாட்டும் பொறுப்பை IN-SPACe அமைப்பு மேற்கொள்ளும்.
  • NSIL நிறுவனம்: அரசுக்கு சொந்தமான நிறுவனமான 'புதிய விண்வெளி இந்திய நிறுவனம்' (NSIL), 2019 மார்ச் மாதத்தில் நிறுவப்பட்டது. விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் துறையை ஊக்குவிப்பதற்கான பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை மாற்றும் பொறுப்பு NSIL அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • முத்ரா திட்டம்: பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ், சிறுதொழில் நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான சிசு கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடன்தாரர்களில் தகுதியானவர்களுக்கு கடனுக்கான வட்டியில் 2 சதவீத தள்ளுபடி அளிக்க ஒப்புதல் அளித்தது. 
  • UCBs: Urban Cooperative Banks, AHIDF: Animal Husbandry Infrastructure Development Fund, N-SPACe: Indian National Space Promotion and Authorization Centre, NSIL: New Space India Limited.
ஜம்மு-காஷ்மீரில் தேவிகா மற்றும் புனேஜா பாலங்கள் திறப்பு
  • மத்திய கிழக்கு பிராந்திய அபிவிருத்தி இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation) 2020 ஜூன் 24 அன்று மெய்நிகர் தளத்தின் (virtual platform) மூலம், தேவிகா மற்றும் புனேஜா என்ற (Devika and Puneja Bridges) இரு பாலங்களை திறந்து வைத்தார்.
  • தேவிகா பாலம்: ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 10 மீட்டர் நீளம் கொண்டது. இந்திய இராணுவ வடக்கு கட்டளை தலைமையகம் உதம்பூரில் அமைந்துள்ளது.
  • புனேஜா பாலம்: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படேர்வா நகரில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 50 மீட்டர் நீளம் கொண்டது.
மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1,340 'வென்டிலேட்டர்கள்' 
  • மூச்சு விட சிரமப்படும் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க, வென்டிலேட்டர் சாதனம் உதவுகிறது. இதை, உள்நாட்டில் தயாரிக்கவும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவவும், பிரதமரின் 'பி.எம். கேர்ஸ் பண்டு' எனப்படும் கொரோனா நிவாரண நிதியத்தில் இருந்து, 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது 2,923 வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், 1,340 வென்டிலேட்டர்கள், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, டில்லி, பீஹார் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கான உள்நாட்டு வாகனம் - உருவாக்கம்
  • உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வெட்டுக்கிளி கட்டுப்பாட்டுக்கான "ULV ஸ்ப்ரேயர் வாகனம்" (Ultra Low Volume) தனது சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. இராஜஸ்தானின் அஜ்மீர் மற்றும் பிகானேர் மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
ரிலையன்ஸ் ஜியோ டிவி மற்றும் ஹரியானா அரசு இணைந்த 'தொலைதூர கற்றல் ஒப்பந்தம்'
  • ரிலையன்ஸ் ஜியோ டிவி மற்றும் ஹரியானா அரசு இணைந்து முதலமைச்சரின் தொலைதூர கற்றல் திட்டத்தின் கீழ் ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • JioTV தொலைக்காட்சி மூலம், EDUSAT செயற்கைக்கோள் வழியாக நான்கு கல்வி சேனல்கள் ஒளிபரப்பப் படவுள்ளன. 
  • இந்த ஒப்பந்தம் ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மொத்தமாக 52 லட்சம் மாணவர்களுக்கு பயனளிக்கும். 
தபால் நிலையங்களில் 'பாஸ்போர்ட் சேவை மையம்' 
  • ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நாட்டில் தற்போது 93 சேவை மையங்கள் உள்பட 517 பாஸ்போர்ட் மையங்கள் உள்ளன. 
  • சிப் பாஸ்போர்ட்: மேலும் சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்டுகளையும் அரசு தயாரித்து வருகிறது நாசிக்கில் உள்ள அச்சகம் மற்றும் தேசிய தகவல் மையத்துடன் இணைந்து இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பாதுகாப்பு/விண்வெளி
இரண்டாம் உலகப்போரின் 75-ஆம் ஆண்டு வெற்றி விழா - மாஸ்கோ அணிவகுப்பு 2020
  • இரண்டாம் உலகப்போரின் போது 1941 முதல் 1945 வரை நாட்டை பாதுகாக்க இரஷிய மக்கள் போரிட்டு வெற்றி பெற்றதன் 75-வது ஆண்டு விழாவை யொட்டி மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம் ஆகும்.
  • இரண்டாம் உலகப்போரின் 75-வது ஆண்டு வெற்றி விழா அணிவகுப்பு, மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் 2020 ஜூன் 24-அன்று நடந்தது. இந்த அணிவகுப்பில் இந்த வெற்றி விழா பேரணியில் இந்திய முப்படையைச் சேர்ந்த 75 வீரர்கள், சீனா உள்ளிட்ட 18 நாடுகளின் ராணுவ வீரர்களும் பங்கேற்றனர். 
  • இராஜ்நாத் சிங் 3-நாள் சுற்றுப்பயணம்: இந்த மாஸ்கோ அணிவகுப்பை, ரஷிய அதிபர் புதின், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் பார்வையிட்டனர். 
  • முன்னதாக, இரஷிய அதிபர் புதின் அழைப்பை ஏற்று 3 நாள் சுற்றுப்பயணமாக, இராஜ்நாத் சிங் ஜூன் 23-அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றார். இரஷிய துணைப் பிரதமர் யூரி போரிசோவை அவர் சந்தித்து பேசினார். 
  • 75-வது ஆண்டு வெற்றி விழா: இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி ரஷிய படைகள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்தன. இதனால் ஜெர்மனி அதிபர் சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த நாட்டு ராணுவம் இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட நேச நாட்டு படைகளிடம் சரண் அடைந்தது. இதனால் போர் முடிவுக்கு வந்தது.
  • இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை ரஷியா ஒவ்வொரு ஆண்டும் மே 9-ந் தேதி வெற்றி தின விழாவாக கொண்டாடி வருகிறது. ஜெர்மனியை வெற்றி கொண்ட 75-வது ஆண்டு வெற்றி தினத்தை வழக்கம் போல் மே மாதம் 9-ந் தேதி கொண்டாட ரஷியா முடிவு செய்து இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை ரஷியா தள்ளிவைத்து ஜூன் 24-அன்று நடத்தப்பட்டது.
சீனாவின் BeiDou-வகை இறுதி செயற்கைக்கோள் ஏவல்
  • சீனா தனது 'BDS-3' எனப்படும் வழிகாட்டி செயற்கைக்கோள் அமைப்பின் இறுதி செயற்கைக்கோளை 2020 ஜூன் 23 அன்று ஜிச்சாங் விண்வெளி மையத்திலிருந்து லாங் மார்ச் 3 ராக்கெட் மூலம் ஏவியது. இது பீடோ அமைப்பின் 55 வது செயற்கைக்கோளாகும்.
  • BeiDou என்றால் மாண்டரின் மொழியில் ‘Big Dipper’ என்று பொருள்.
  • BDS: BeiDou Navigation Satellite System
விருதுகள்
கேரள சுகாதார அமைச்சருக்கு ஐ.நா. சபை மரியாதை
  • கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் திறம்பட பணியாற்றியதற்காக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா அவர்களை 2020 ஜூன் 23 உலக பொது சேவை தினத்தில் தங்கள் குழு விவாதத்தில் இணைத்துக் கொண்டு ஐ.நா., சபை கவுரவித்தது.
  • இந்தியாவில் முதன்முதலில் ஜனவரி மாதத்தில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் தொற்று பதிவானது. ஆரம்பக் கட்டத்திலேயே தீவிர பரிசோதனை, கொரோனா தொற்றுள்ளவர்களுடன் பழகியவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை உத்தியாகவே கடைப்பிடித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நிபா வைரஸ் கிளம்பிய போது ஆற்றிய களப்பணி சுகாதார அமைச்சர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா காலத்திலும் கைக்கொடுத்தது.
'சிறந்த நள்ளிரவு குறும்படம்' விருது - தி ஸ்லீப்வாக்கர்ஸ்
  • இந்தி திரைப்பட நடிகை ராதிகா ஆப்தே, தி ஸ்லீப்வாக்கர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். பாம்ஸ் ஸ்ப்ரிங் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபெஸ்ட் என்ற குறும்பட விழாவில் ராதிகா ஆப்தே இயக்கிய தி ஸ்லீப்வாக்கர்ஸ் குறும்படம் 'சிறந்த நள்ளிரவு குறும்படம்' என்ற விருதை பெற்றுள்ளது.
  • இக்குறும்படம் தூக்கத்தில் நடக்கும் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
மாநாடுகள்
புரி ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை
  • ஒடிசா மாநிலம் புரியில், ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, பலத்த பாதுகாப்புடன் ஜூன் 23-அன்று நடைபெற்றது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெறும் ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறிவியல் தொழில்நுட்பம்
‘யுக்தி 2.0’வலைதளம் அறிமுகம்
  • 2020 ஜூன் 23-அன்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ‘யுக்தி 2.0’ (YUKTI Portal 2.0) என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தினார்.
  • YUKTI Portal 1.0: யுக்தி என்பது அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளுடன் கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடும் இளைய இந்தியா திட்டம் ஆகும். மத்திய அரசின் முன்முயற்சி திட்டங்களைக் கண்காணிக்கவும் கொரானா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், 'யுக்தி வலைத்தளம்' 2020 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
  • YUKTI: Young India Combating COVID with Kowledge, Technology and Innovation
தமிழ்நாடு நிகழ்வுகள்
நாமக்கல்லில்‘பயோ கியாஸ்’ உற்பத்தி எந்திரம் - தொடங்கிவைப்பு
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ‘கம்பிரஸ்ட் பயோ கியாஸ்” (CBG) உற்பத்தி எந்திரத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஜூன் 23-அன்று திறந்து வைத்தார்.
  • மேலும் நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் 5 சி.பி.ஜி. சில்லறை விற்பனை நிலையங்களையும் திறந்து வைத்தார்.
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்.
  • தமிழ்நாடு முதலிடம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15, 876 மெகாவாட் ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை மின் நிறுவுதிறன் 8 ஆயிரத்து 523 மெகாவாட், சூரிய ஒளி மின்சக்தி நிறுவுதிறன் 4 ஆயிரத்து 54 மெகாவாட், தாவரக்கழிவு மின் நிறுவுதிறன் 266 மெகாவாட் மற்றும் இணைமின் உற்பத்தி மின் நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆகும்.
மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க புதிய இணையதளம் - அறிமுகம்
  • தமிழக மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
  • இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • https://e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல‘இ-பாஸ்’ கட்டாயம்
  • தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், ஜூன் 25-முதல் முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் (e-pass) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
விளையாட்டு நிகழ்வுகள்
இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வீரர் "இராகுல் டிராவிட்" விஸ்டன் நிறுவனம் தேர்வு 
  • கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த டெஸ்ட் வீரர் என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்தது விஸ்டன் இந்தியா நிறுவனம். இதற்கான இணையத் தேர்தலில் 52% வாக்குகள் பெற்று சிறந்த டெஸ்ட் வீரர் என்ற சிறப்பை பெற்றார். 
  • சச்சின் டெண்டுல்கர் 48% வாக்குகள் பெற்றார்.200 டெஸ்டுகள் விளையாடியுள்ள சச்சின், 15921 ரன்களையும் 164 டெஸ்டுகள் விளையாடியுள்ள டிராவிட், 13,288 ரன்களையும் எடுத்துள்ளார்கள்.
முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்-க்கு கொரோனா பாதிப்பு
  • உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். செர்பியா மற்றும் குரோஷியா நாடுகளின் இரண்டு நகரங்களில் நடந்த அட்ரியா டூர் என்ற கண்காட்சி டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற முதல்நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 19-ம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னோ கோரிச் (குரோஷியா) ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
பெண்கள் உலக கோப்பை கால்பந்து 2020 - அட்டவணை வெளியீடு
  • கொரோனா எதிரொலியாக 2021-ஆம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் புதிய அட்டவணை ஜூன் 23-அன்று வெளியிடப்பட்டது.
  • 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி 2021 பிப்ரவரி 17 முதல் மார்ச் 7 வரை நடக்கிறது. இறுதிப்போட்டி நவிமும்பையிலும், இந்திய அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கவுகாத்தியிலும் நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற தினம் - ஜூன் 25, 2020 1983
  • இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்ற நாள் ஜூன்.25, 2020 1983 ஆகும். உலக கோப்பை வென்று 37 ஆண்டு நிறைவு அடைந்துள்ளது.
  • 3-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. 1983 ஜூன் 25-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடின, இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து.
முக்கிய நபர்கள்
'தடுப்பூசி மன்னர்' சைரஸ் பூனவாலா
  • 'தடுப்பூசி மன்னர்' என அழைக்கப்படும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனவாலா ஆவார். கொரோனா காலத்தில், உலகளவில், இக்காலகட்டத்தில் அதிகளவு செல்வம் சேர்த்த நபர்கள் வரிசையில், ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில், இவரது சொத்து மதிப்பு, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 மே 31 நிலவரப்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில், 57 இடங்கள் முன்னேறி, 86-வது இடத்தை பிடித்துள்ளார் என, 'ஹுருன்' ஆராய்ச்சி நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.
  • புனேவை சேர்ந்த பூனவாலாவின், 'சீரம்' நிறுவனம், ஏற்கனவே, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாக உள்ளது. 
முக்கிய தினங்கள்
உலக சிக்கிள் செல் தினம் (World Sickle Cell Day) - ஜூன் 19 

சர்வதேச ஒலிம்பிக் தினம் - ஜூன் 23 
  • 1894 ஜூன் 23-அன்று, சர்வதேச ஒலிம்பிக் குழு பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிறுவன தினத்தை நினைவுகூரும் வகையில் ஜூன் 23-ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினமாக கடைபிடிக்கப் பட்டுவருகிறது..
  • உலகெங்கிலும் உள்ள ஒலிம்பிக் குழுக்கள் இந்த நாளில் ஆக்கபூர்வமான நிகழ்வுகளை நடத்துகின்றன, அவை மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டவை: ‘நகர், கற்றுக்கொள், கண்டுபிடி’ (Move, Learn, and Discover).
சர்வதேச மாலுமிகள் தினம் - ஜூன் 25 
  • ஆண்டுதோறும் ஜூன் 25 ஆம் தேதி சர்வதேச மாலுமிகள் (கடலோடிகள்) தினம் (Day of the Seafarer 2019) கொண்டாடப்படுகிறது.
  • 2020 சர்வதேச மாலுமிகள் தின மையக்கருத்து: 'Seafarers are Key Workers'.
உலக வெண்புள்ளி தினம் - ஜூன் 25 
  • வெண்புள்ளி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஆண்டு தோறும் உலக வெண்புள்ளி தினம் ஜூன் 25-ம் தேதி (World Vitiligo Day) கடைபிடிக்கப்படுகிறது. 
  • வெண்புள்ளி என்பது தொற்றுநோய் அல்ல. ஹார்மோன் குறைபாட்டினால் தோல் தனது நிறத்தை இழந்து விடுகிறது. உலகப்புகழ் பெற்ற பாடகரான மைக்கெல் ஜாக்சன் வெண்புள்ளி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். மைக்கெல் ஜாக்சன்-க்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜூன்25-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
I Frame View 

Post a Comment (0)
Previous Post Next Post