நடப்பு நிகழ்வுகள் ஜூன் 3-4, 2020
சர்வதேச நிகழ்வுகள்
G7 அமைப்பில் இந்தியாவை சேர்க்க டொனால்ட் டிரம்ப் - விருப்பம்
- G7 அமைப்பில், சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் கூட்டத்தை, விரைவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், திட்டமிட்டபடி மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் வரை கூட்டத்தை நடத்த வாய்ப்பில்லை.மேலும், ஜி - 7 என்பது, காலாவதியான அமைப்பாகி விட்டது, என்றும், இந்தியா, தென் கொரியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இதில் இணைத்து, ஜி - 10 அல்லது ஜி - 11 என, இதன் பெயரை மாற்ற வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய-சீன ராணுவம் இடையே பேச்சுவார்த்தை
- இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில், நடைமுறை எல்லைக்கோடு அருகே பன்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்தியா சாலைகள் அமைத்து வருகிறது. இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
- பன்காங் ஏரி அருகே, அனுமதிக்கப்பட்ட இடம்வரை இந்திய ராணுவம் ரோந்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த மாதம் 5-ந் தேதி, அந்த இடத்துக்கு 5 கி.மீ.க்கு முன்பே அவர்களை சீன ராணுவம் தடுக்க முயன்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இதில் சிலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்தினரும் படைகளை குவித்ததால், அங்கு சுமார் ஒரு மாதமாக பதற்றம் நிலவுகிறது.
- கமாண்டர் அந்தஸ்து கொண்ட இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு லடாக்கில் சுசுல் மோல்டோ என்ற இடத்தில் ஜூன் 6-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை: மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுமதி
- கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை மீண்டும் தொடர உலக சுகாதார நிறுவனம் அனுமதி ஜூன் 3-அன்று அளித்துள்ளது. இந்தியாவில் மலேரியாவுக்கு எதிரான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பலன் அளிப்பது தெரிய வந்தது.
- அதே நேரத்தில் இந்த மாத்திரைகளுக்கு எதிரான தகவல்களும் வெளிவந்தன. இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறபோது, கொரோனா நோயாளிகளின் இறப்பு வீதம் அதிகரித்து இருப்பதாக சில ஆய்வு தகவல்கள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொடுத்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
- அதைத் தொடர்ந்து உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொடுத்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்திய நிகழ்வுகள்
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஜூன் 3-அன்று நடைபெற்றது. அதில், 65 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த சட்ட திருத்தம், விவசாய துறைக்கு புத்துயிரூட்டும். விவசாயிகள் வருவாயை பெருக்க உதவும். அதிகப்படியான தலையீடு குறித்த தனியார் முதலீட்டாளர்களின் அச்சத்தை களைவதாக இந்த சட்ட திருத்தம் அமையும்.
- வேளாண் பொருட்கள் தொடர்பான தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதற்காக ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளித்தது.
- ‘ஒரே நாடு ஒரே சந்தை‘ என்ற திட்டத்துக்காக ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்படும். இவை ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டங்களில் அடங்கும்.
- சியாம பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டல்: கொல்கத்தா துறைமுகத்துக்கு மறைந்த ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படுவதற்கு ஒப்புதல் அளித்தது.
- அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு: இந்தியாவில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ‘அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு‘ அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2024-2025 நிதியாண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்கும் இந்தியாவின் லட்சியத்தை ஊக்குவிக்கும் வகையில் இம் முடிவு மேற்கொள்ளப்படுகிறது.
பாலைவன வெட்டுக்கிளிகளின் நகர்வுகளை கண்காணிக்க 'ஜோத்பூரில் எச்சரிக்கை மையம்'
- ஆபத்தான பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டமாக வந்து வட மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையில் 10 பில்லியன் அதாவது ஆயிரம் கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம்.
- ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் கொண்டவை. இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள். ஒருநாளைக்கு தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும்.இவை ஒருநாளைக்கு சராசரியாக 35,000 பேர் சாப்பிடக்கூடிய உணவை உட்கொண்டுவிடும்.
- பாலைவன வெட்டுக்கிளிகளின் நகர்வுகளை கண்காணிக்க மத்திய அரசு இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் எச்சரிக்கை மையத்தை தொடங்கியுள்ளது.
- தென்னிந்தியாவிற்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு இல்லை. காற்றின் திசை கிழக்கு நோக்கி இருப்பதால் வெட்டுக்கிளிகள் பஞ்சாப், ஒடிசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. விந்திய மலைத்தொடர், மேற்கு தொடர்ச்சி மலைகளும் தமிழகத்துக்கு அரணாக இருக்கிறது.
இந்தியாவில் வெளிநாட்டு வைரஸ் வகைகள் - ஆய்வுத் தகவல்கள்
- சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து, கொரோனா வைரசின் இரண்டு வகைகள், இந்தியாவில் பரவி அதிகம் காணப்படுவதாக, இந்திய விலங்கியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் முக்கிய விவரங்கள்:
- சர்வதேச மரபணு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட, 400 இந்திய மரபணுக்களை, இந்திய விலங்கியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில், சார்ஸ்கோ - வி2 (SARS-CoV-2) வைரசின், 198 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
- டில்லி, தெலுங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில், அதிக வைரஸ் வகைகளை கண்டறியப்பட்டுள்ளன.
- வைரஸ் குறித்த ஆராய்ச்சியில், இரண்டு வகைகள், ஆதிக்கம் செலுத்துகின்றன. ''இதில், ஒன்று, சீனாவின் வூஹானில் இருந்து வந்தது; மற்றொன்று, ஐரோப்பிய வகையாகும்.
- அனைத்து வைரசுகளும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. மற்ற நாடுகள் நடத்திய ஆய்வுகளில், சார்ஸ்கோ வி - 2 வைரஸ் மாற்றம் கண்டிருப்பதை உறுதிபடுத்தின
- SARS-CoV-2: Severe Acute Respiratory Syndrome Coronavirus 2.
பாதுகாப்பு/விண்வெளி
'தேஜஸ்-N' போர் விமானம்: வெற்றிகர சோதனை
- உள்நாட்டில் சோதனைக்காக அதிநவீன தேஜஸ்-என் (Tejas-N) போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரட்டை இன்ஜின் பொருத்தப் பட்ட இந்த விமானம், விண்ணில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது.
- கோவா கடற்பகுதியில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான, ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலில், இந்த விமானம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
- உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல்: 'தேஜஸ்-என்' போர் விமான சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, அதை உள்நாட்டில் தயாரிக்க, விமான மேம்பாட்டு அமைப்பு
- ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இத்திட்டத்திற்கு, 7,௦௦0-8,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், இவ்விமானம், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலுடன் இணைக்கப்படும்.
நியமனங்கள்
பின்லாந்துக்கான இந்தியத் தூதராக இரவீஷ் குமார் நியமனம்
- பின்லாந்து நாட்டுக்கான இந்தியத் தூதராக ரவீஷ் குமார் அவர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது.இரவீஷ் குமார் தற்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலராக உள்ளார். இதற்கு முன்பு ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2020 வரை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்.
- தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கே. சண்முகம் அவர்களின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கே. சண்முகத்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாத இறுதியில் முடிவடைய இருந்தது. தற்போது ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநாடுகள்
உலக நோய்த்தடுப்பு கூட்டணி உச்சி மாநாடு-2020
- ஸ்விட்சா்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக நோய்த்தடுப்பு கூட்டணியின் (GAVI) உச்சிமாநாடு காணொலி முறையில் ஜூன் 4-அன்று நடைபெற்றது.
- பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற (Virtual Global Vaccine Summit) இந்த மாநாட்டில் பிரதமா் மோடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதமா்கள், அமைச்சா்கள், தொழில்துறை தலைவா்கள், சமூக நல அமைப்பினா் கலந்துகொண்டனா்.
- உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு (Gavi, the Vaccine Alliance), 1.5 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.113.13 கோடி) நிதி வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது.
- GAVI: Global Alliance for Vaccines and Immunization.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம்-2020
- 2020 ஜூன் 2-அன்று காணொலி காட்சி மூலம் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
சுற்றுச்சூழல் நிகழ்வுகள்
கரையைக் கடந்த 'நிசா்கா' புயல்
- அரபிக்கடலில் உருவான 'நிசா்கா' புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே ஜூன் 3-அன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வீசியது. புயலின் கண் பகுதி 65 கிலோ மீட்டர் விட்டத்தில் பரந்து விரிந்து இருந்தது. புயல் முழுவதுமாக கரையை கடக்க சுமார் 3½ மணி நேரம் ஆனது.
பொருளாதார நிகழ்வுகள்
GST மாநிலங்களுக்கான இழப்பீடு: ரூ.36.400 கோடி விடுவிப்பு
- சரக்கு மற்றும் சேவை வரி (GST) இழப்பீடாக மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி வரையிலான 3 மாதங்களுக்காக ரூ.36,400 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- 2019 ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாதங்களுக்காக ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.1.15 லட்சம் கோடியை மத்திய அரசு விடுவித்திருந்தது.
- 2018-19 காலகட்டத்தில் ரூ.69,275 கோடியும், 2017-18 காலகட்டத்தில் ரூ.41,146 கோடியும் மாநிலங்களுக்கான இழப்பீடாக அளிக்கப்பட்டது.
- கூடுதல் வரியாக கடந்த 2019-20 ஆண்டில் ரூ.95,000 கோடியும், 2018-19 ஆண்டில் ரூ.95,081 கோடியும், 2017-18 ஆண்டில் ரூ.62,611 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
- GST சட்டத்தின் படி, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்கள் சந்திக்கும் வருவாய் இழப்புக்காக மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.
6,000 ஊழியர்களுக்கு நிப்பான் பெயிண்ட் நிறுவனம் - மருத்துவக் காப்பீடு:
- உலகின் முன்னணி வண்ணப்பூச்சு உற்பத்தி நிறுவனமான நிப்பான் பெயிண்ட் பிரைவேட் லிமிடெட், இந்தியா முழுவதும் அதன் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 6000க்கும் மேற்பட்ட வர்ணம் பூசுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரையில் காப்பீடுத் தொகை கிடைக்கும்.
- ஜப்பானில் நிறுவப்பட்ட நிப்பான் பெயிண்ட் நிறுவனம், 140 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. ஆசியாவில் வண்ணப்பூச்சு உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு நிகழ்வுகள்
14 கோடி முககவசங்கள் இலவசமாக வழங்க பரிசீலனை
- கொரானா நோய் பரவலை தடுக்க 7 கோடி மக்களுக்கு தலா 2 வீதம் 14 கோடி முககவசங்கள் இலவசமாக வழங்க பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதாவது 2.1 கோடி குடும்பத்தை சார்ந்த சுமார் 7 கோடி பேருக்கு தலா 2 முககவசம் வீதம் 14 கோடி முககவசங்கள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.
வேளாண் பொருள்கள் விற்பனை - புதிய சட்டத் திருத்தம்
- வேளாண் பொருள்கள் விற்பனையை எளிதாக்க புதிய சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்திருத்தம் மூலம் வேளாண் விளை பொருள்களை எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகள் விளைபொருள்களை தங்கள் பண்ணையிலோ அல்லது உணவுப் பூங்கா வளாகங்களிலோ அங்கீகரிக்கப்பட்ட வணிகா்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.
- வேளாண் விற்பனைக் குழுக்களின் தனி அலுவலா்கள் பதவிக் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அவசர சட்டத்துக்கும் ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளார்.
விளையாட்டு நிகழ்வுகள்
தேசிய விளையாட்டு விருதுகள்-2020: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
- தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 22-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
- விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், விளையாட்டு மற்றும் போட்டிகளுக்கு பங்களிப்பு அளிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
- கேல்ரத்னா விருது பெறுபவருக்கு ரூ.7½ லட்சமும், மற்ற விருதுகளை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்டு 29-ந் தேதி இந்த விருது வழங்கப்படுவது வாடிக்கையாகும்.
- 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வீரர், வீராங்கனைகள் செய்த சாதனைகள் இந்த ஆண்டுக்கான விருது தேர்வில் கருத்தில் கொள்ளப்படுகிறது.
முக்கிய தினங்கள்
ஜூன் 3 உலக சைக்கிள் தினம்
- உலக சைக்கிள் தினம் (World Bicycle Day 2019) ஐ. நா. அவையால் ஜூன் 3 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- முதலாவது அதிகாரப்பூர்வ உலக சைக்கிள் தினம் 2018 ஜூன் 3 அன்று கடைபிடிக்கப்பட்டது. உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தான சைக்கிள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
ஜூன் 4 - சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம்
- ஐ. நா. அவையால் ஆண்டுதோறும் ஜூன் 4 ஆம் தேதி அன்று "சர்வதேச ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகள் தினம்" (International Day of Innocent Children Victims of Aggression) கடைபிடிக்கப்படுகிறது.
Download this article as PDF Format