தினத்தந்தி நாளிதழ் கட்டுரை, ஜூன் 24, 2020
- இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வென்றதன் 75-வது நினைவு நாள் அந்த நாட்டின் தலைநகர்மாஸ்கோவில் ஜூன் 24-அன்று மாஸ்கோ வெற்றிதினமாக கொண்டாடப்பட்டது.
- இதையொட்டி, இரண்டாம் உலகப்போரையும், அதில் இந்தியாவின் பங்களிப்பையும் பற்றி தினத்தந்தி நாளிதழ் ஜூன் 24 அன்று வெளியிட்ட கட்டுரை இங்கு அறிவுத் தேடலுக்காக பகிரப்படுகிறது.
சர்வாதிகாரி ஹிட்லர்
- “ஆசையே துன்பத்துக்கெல்லாம் காரணம்” என்றார், கருணையே வடிவான புத்தமகான். ஆனால் ஆசை யாரை விட்டது.
- மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை- உலகில் உள்ள எல்லா சச்சரவுகளுக்கும், மோதல்களுக்கும் அநேகமாக இந்த மூன்றில் ஒன்றுதான் காரணமாக இருக்க முடியும்.
- பெண்ணாசையும், பொன்னாசையும் தனி மனிதனின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
- ஆனால் மண்ணாசை என்பது சாதாரண நிலத்தகராறு மட்டும் அல்ல; ஒரு நாட்டையே-ஏன் இந்த உலகத்தையே புரட்டிப் போடும் சக்தி வாய்ந்தது. மண்ணாசையால் வீழ்ந்த சிம்மாசனங்களும், தேசங்களும் கணக்கில் அடங்காதவை.
- தனிமனித ஆசை-ஆக்கிரமிப்பு வேட்கைக்கு வடிகாலாக அமைகிறது போர். இதில் பலியாவது ஆயுதம் ஏந்தி களத்தில் நிற்கும் வீரர்கள் மட்டும் அல்ல; பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அப்பாவிகளும்தான்.
- இந்த பூமிப்பந்து எத்தனையோ போர்களை பார்த்து இருக்கிறது. அதில் 5 ஆண்டுகள் நடைபெற்ற முதலாம் உலகப்போரும், 7 ஆண்டுகள் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரும் மனிதகுலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தின.
- முதலாம் உலகப்போரால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து உலக நாடுகள் மீண்டு எழுந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் இரண்டாம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
ரஷியாவை ஆக்கிரமிக்க முயற்சி
- 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி ஹிட்லரின் நாஜிப்படை அண்டை நாடான போலந்தை ஆக்கிரமிப்பதற்காக படையெடுத்தது. இந்த நாள்தான் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நாளாக வரலாற்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
- இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தலைமையிலான ‘அச்சு நாடுகள்’ அணியும், இங்கிலாந்து தலைமையிலான ‘நேச நாடுகள்‘ அணியும் மோதின. ஜெர்மனி அணியில் இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று இருந்தன. நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்தன. அப்போது சர்வாதிகாரி முசோலினி இத்தாலியின் அதிபராக இருந்தார்.
- போர் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் இரு அணிகளிலும் ஒருசில நாடுகளே இருந்தன. ஆனால் போரின் போக்கு மாற மாற மேலும் பல நாடுகள் களத்தில் குதிக்க வேண்டிய நிலை உருவானது.
- போர் தொடங்கிய 3 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளை கைப்பற்றிய அச்சு நாட்டு படைகள், 1941-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் அந்த நாட்டின் மீது படையெடுத்ததால், ரஷியா நேச நாட்டு அணியில் இணைந்து போரில் ஈடுபட்டது.
போரில் குதித்த அமெரிக்கா
- இங்கிலாந்து தலைமையிலான நேச நாடுகளுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கி வந்த அமெரிக்காவும், இந்த போரில் கலந்து கொள்ளாமல் சில ஆண்டுகள் ஒதுங்கியே இருந்தது.
- ஆனால் 1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி அச்சு நாடுகளுக்கு ஆதரவாக திடீரென்று களத்தில் குதித்த ஜப்பான், அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் கடற்படை தளத்தின் மீது போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த தளம் சின்னாபின்னமானது. 10-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், 180-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நாசமாயின. 2,403 பேர் பலி ஆனார்கள். 1,178 பேர் காயம் அடைந்தனர்.
- இது தூங்கிய புலியை எழுப்பிய கதையாகிவிட்டது. அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா, ஜப்பானின் இந்த தாக்குதலால் வெகுண்டு எழுந்து போரில் குதித்தது.
இந்தியாவின் பங்களிப்பு
- இரண்டாம் உலகப் போரில், இங்கிலாந்து ஆளுமையின் கீழ் இருந்த இந்தியாவின் பங்கு மகத்தானது ஆகும். போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவில் விடுதலை போராட்டம் மிகவும் இருந்தது. அப்போது, இந்திய படைகளை நேசப்படைகளுக்கு ஆதரவாக போரில் ஈடுபடுத்த ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் இந்திய படைகள் இங்கிலாந்துக்கு ஆதரவாக இருக்கும் என்று கூறியது.
- ஆனால் ஆங்கிலேய அரசு காங்கிரசின் இந்த கோரிக்கையை நிராகரித்தது. தனது அதிகார பலத்தை பயன்படுத்தி இந்திய படைகளை போரில் ஈடுபடுத்தியது. பர்மா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு இந்திய படைகளை இங்கிலாந்து அனுப்பி வைத்தது. அங்கு நேச நாட்டு படைகளுடன் இணைந்து இந்திய வீரர்கள் அச்சு நாட்டு படைகளுக்கு எதிராக போரிட்டனர்.
- அந்த வகையில் இந்த போரில் உலகம் முழுவதும் சுமார் 25 லட்சம் இந்திய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’
- இதற்கிடையே, தங்கள் கோரிக்கையை நிராகரித்ததோடு இந்திய படைகளை போரில் ஈடுபடுத்த ஆங்கிலேய அரசு தீர்மானித்ததை எதிர்த்து 1942-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘வெள்ளையனே வெளியேறு‘ இயக்கத்தை காங்கிரஸ் தொடங்கியது.
- ஒரு பக்கம் போர் நெருக்கடி; மற்றொரு பக்கம் சுதந்திர போராட்ட நெருக்கடி என்று தவித்த ஆங்கிலேய அரசு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தலைவர்களை பிடித்து சிறையில் தள்ளியது.
- இதற்கிடையே, அகிம்சை வழியில் போராடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது என்று கருதிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்க முடிவு செய்தார். இதனால் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 1939-ம் ஆண்டு அவர் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆங்கிலேய அரசு அவரை வீட்டுக்காவலில் சிறை வைத்தது.
- ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் உதவியுடன் இந்தியாவில் இருந்து ஆங்கிலேய ஆட்சியை அகற்ற முடியும் என்று கருதிய நேதாஜி, 1940-ம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து தப்பினார். 1941-ம் ஆண்டு ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்தார். அதன்பிறகு அங்கிருந்து இந்தியா திரும்ப முடிவு செய்தார்.
- இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடிய நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் உள்ளன.
- இதற்கிடையே இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கத்திய நாடுகளில் ஜப்பானின் கை ஓங்கி இருந்தது. மேற்கத்திய நாடான இங்கிலாந்துக்கு ஜப்பான் மற்றும் அச்சு நாடுகளின் படைகளை எதிர்த்து போரிட, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவை ராணுவ ரீதியில் முக்கிய மையமாக பயன்படுத்திக் கொண்டது.
- போர் தளவாடங்களை உற்பத்தி செய்யவும், படைகளை தங்க வைக்கவும், வேறு இடங்களுக்கு நகர்த்தவும் இந்தியா ஆங்கிலேய படைகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
முசோலினி சுட்டுக்கொலை
- போர் தீவிரம் அடைந்த நிலையில், இங்கிலாந்து தலைமையிலான நேசப்படைகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
- இத்தாலியில் சர்வாதிகாரி முசோலினிக்கு ஏற்கனவே நிறைய எதிர்ப்பு இருந்து வந்தது. போர் உச்சக்கட்டத்தை அடைந்த போது அவருக்கு எதிர்ப்பும் அதிகமானது. அவரது எதிர்ப்பாளர்கள் மிலன், துரின் நகரங்களை 1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி முசோலினியின் பிடியில் இருந்து மீட்ட நிலையில், அடுத்த 2 நாட்களில் மிலன் நகரை நேசப்படைகள் முற்றுகையிட்டன.
- இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 28-ந் தேதி முசோலினியையும், அவரது மனைவி கிளாரெட்டா பெடாசியையும் எதிர்ப்பாளர்கள் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரையும் அவர்கள் சுட்டுக் கொன்று, பிணங்களை பொது இடத்தில் தொங்கவிட்டனர்.
- ஏப்ரல் 30-ந் தேதி ரஷிய படைகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்தன. இதனால் தப்பி ஓட முடியாது என்ற முடிவுக்கு வந்த சர்வாதிகாரி ஹிட்லர், முசோலினிக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படக்கூடாது என்று தனது மனைவி ஈவா பிரவுனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஈவா பிரவுனுடன் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 40 மணி நேரத்துக்கு முன்புதான் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்தது
- ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து ஜெர்மனி மே 8-ந் தேதி நேச நாட்டு படைகளிடம் சரண் அடைந்தது. இது ரஷிய படைகளுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்பட்டது. இதனால் அன்றைய தினத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததாக இங்கிலாந்து பிரதமர் விண்ட்சர் சர்ச்சில் அறிவித்தார்.
- ஆனால் மழை விட்டாலும், தூறல் விடவில்லை என்பது போல் ஜப்பான் சரண் அடைய பிடிவாதமாக மறுத்து, அமெரிக்காவுடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா சரண் அடையுமாறும், இல்லையேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஜப்பானை எச்சரித்தது. ஆனால் ஜப்பான் அதை காதில் வாங்கவில்லை.
- இதனால் ஜப்பானை பணிய வைப்பதற்காக அமெரிக்கா கடைசி துருப்பு சீட்டாக அணுகுண்டை கையில் எடுத்தது. ஆகஸ்டு 6-ந் தேதி ஹிரோஷிமா நகரில் முதல் அணுகுண்டை வீசியது. 2 நாட்கள் கழித்து 9-ந் தேதி நாகசாகி நகரில் மற்றொரு அணுகுண்டை வீசியது. இதில் அந்த நகரங்கள் நாசமாயின. சுமார் 2 லட்சம் பேர் உயிர் இழந்தனர். ஏரளாமானோர் நடைபிணமாயினர்.
- இந்த அணுகுண்டு வீச்சு ஜப்பானுக்கு மட்டுமின்றி உலகுக்கும் ஒரு பாடமாக அமைந்தது. பெரும் இழப்பை சந்தித்த பிறகு ஆகஸ்டு 15-ந் தேதி ஜப்பான் சரண் அடைந்தது. அத்துடன் இரண்டாம் உலகப்போருக்கு முடிவுரை எழுதப்பட்டது.
- போருக்கு பின் அமெரிக்காவும், ரஷியாவும் வல்லரசாக உருவெடுத்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போரும் தொடங்கியது.
நடையை கட்டிய ஆங்கிலேயர்கள்
- உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் பங்கேற்றனர். 7 ஆண்டுகள் நீடித்த போரில் வீரர்கள், அப்பாவி பொதுமக்கள் என சுமார் 8½ கோடி பேர் உயிர் இழந்தனர்.
- 1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவில் சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்தது. மக்களிடையே ஏற்பட்ட விடுதலை எழுச்சியை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு 1947-ம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் வழங்கிவிட்டு, ஆங்கிலேயர்கள் நடையை கட்டினார்கள். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய இந்தியா இன்று பொருளாதாரம், பாதுகாப்பு, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, விண்வெளி ஆய்வு என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது.
- ராணுவ ரீதியில் வலுவாக இருந்தாலும் பாகிஸ்தான், சீனா, இலங்கை போன்ற அண்டை நாடுகளுடனும், பிற நாடுகளுடனும் நட்புறவை பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால் சில அண்டை நாடுகள் இந்தியாவை சீண்டிக் கொண்டே இருக்கின்றன.