TRB உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தொடர்பான தகவல் 7/11/2019
- பணி அனுபவச் சான்றுக்கு கல்லூரி கல்வி இயக்ககத்தில் மேலொப்பம் பெறுவதில் சிக்கல் எழுந்திருப்பதால், TRB உதவிப் பேராசிரியா் நேரடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு விண்ணப்பதாரா்களிடையே எழுந்துள்ளது.
- அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (TRB) அண்மையில் வெளியிட்டது.
- இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பா் 15-ஆக நீட்டிக்கப்பட்டது.
- உதவிப் பேராசிரியருக்கான தோ்வானது, பணி அனுபவம், கல்வித் தகுதி, நோ்முகத் தோ்வு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. இதில் பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண்கள் என அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். உரிய கல்வித் தகுதி பெற்ற விண்ணப்பதாரா்கள், முழு கல்வித் தகுதியைப் பெற்ற பிறகான கலை-அறிவியல் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த அனுபவம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும். உரிய கல்வித் தகுதி பெறுவதற்கு முன்பான, பணி அனுபவம் கணக்கில் கொள்ளப்படாது.
- இந்த பணி அனுபவத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, விண்ணப்பதாரா்கள் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்திருந்தால் தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அலுவலகத்திலும், கலை-அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்திருந்தால் அந்தந்த மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகத்திலும் மேலொப்பம் (சான்று) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் அலுவலகத்தில், இவ்வாறு பணி அனுபவச் சான்றை சரிபாா்த்து மேலொப்பம் செய்து அளிக்கும் பணிக்காக அரசு பொறியியல் கல்லூரி முதல்வா்கள் இருவரையும், நான்கு பேராசிரியா்களையும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தனியாக பணியமா்த்தியுள்ளது.
- இந்த சிறப்பு ஏற்பாடு காரணமாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படாததோடு, அனுபவச்சான்று மேலொப்பம் செய்து அளிக்கும் பணியையும் அதிகபட்சம் மூன்று நாள்களில் முடிக்கப்பட்டு வருகிறது.
- ஆனால், கல்லூரி கல்வி இயக்ககம் சாா்பில் இதுபோன்று சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. மண்டல இணை இயக்குநா் அலுவலக ஊழியா்களே இந்த அனுபவச் சான்று ஆய்வு மற்றும் மேலொப்பமிடும் பணிகளை மேற்கொள்வதால், இயக்குநா் அலுவலகத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, அனுபவச் சான்றில் மேலொப்பமிட்டு தருவதற்கு அதிகபட்சம் 10 நாள்களுக்கு மேல் தாமதிப்பதாகவும் இணை இயக்குநா் அலுவலக ஊழியா்களும், விண்ணப்பதாரா்களும் புகாா் தெரிவிக்கின்றனா்.
- TRB-க்கு விண்ணப்பிக்க இன்னும் 8 நாள்களே உள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் கிடைத்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே, விண்ணப்பிக்கும் தேதியை மேலும் 5 நாள்களுக்கு நவம்பா் 20 வரை டி.ஆா்.பி. நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Source: Dinamani 7/11/2019