TNPSC Group 2 Exam Pattern Changed Again - Details

TNPSC Group 2 Exam Latest Exam Pattern Details

குரூப்-2 தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்
    TNPSC Group 2 Exam latest exam Pattern
  • குரூப்-2 தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள தகவல்கள் விவரம்:
  • குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு
    • குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி வெளியிட்டது. 
    • இரண்டு தேர்வுகளுக்கும் முதல் நிலைத்தேர்வும், முதன்மை எழுத்துத்தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.
    • முக்கியமாக தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மொழி அறிவுத்திறன், கோப்புகள் வரைவுத்திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே, ஆழ்ந்து விவாதித்து குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • மேற்படி பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவை பல்வேறு துறைத் தலைவர்கள், தமிழ் பேராசிரியர்கள் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரையின்படி, தற்கால அரசு துறைகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டன.
  • தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்கள்
    • இந்த பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தை பெரும்பாலானோர் வரவேற்று உள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் சில மாற்றங்கள் தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர். 
    • அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு குரூப்-2, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளுக்கான தேர்வுத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.
    • அதன்படி முதல்நிலை தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. இருப்பினும் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் (யூனிட்) 8, 9-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் கேள்விகள் கேட்கப்படும்.
    • தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்வதற்காகவும் முதல்நிலை தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இத்தேர்வுக்கு தயாராக போதிய கால அவகாசம் வழங்கப்படும்.
  • முதன்மை எழுத்து தேர்வில் மாற்றம் 
    • ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத்தேர்வு தற்போது 2 தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ மட்டும் தனித்தாளாக தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இத்தேர்வு 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக 1½ மணி நேரம் நடைபெறும். இத்தேர்வில் தகுதிபெற 100-க்கு 25 மதிப்பெண்கள் அவசியம் பெறவேண்டும்.
    • குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே தாள்-2 மதிப்பீடு செய்யப்படும். இத்தகுதித்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்வரின் தரவரிசை (ரேங்க்) நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம், பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்துக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் தமிழ் மொழியில் எழுத, படிக்கத் தெரிந்த மாணவர்களால் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
  • தமிழக மாணவர்களுக்கு நன்மை
    • பகுதி-அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள்-2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும். விண்ணப்பதாரர் இத்தாளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தர நிர்ணயத்துக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
    • முதல்நிலை தேர்விலும், முதன்மை எழுத்து தேர்விலும் வெற்றிபெற வேண்டுமானால் தேர்வர்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் மொழி மற்றும் இலக்கியம், தமிழகத்தின் பல்வேறு கலை மரபுகள், சமூகப் பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இது தமிழக மாணவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்.
  • குறைந்தபட்ச மதிப்பெண்
    • அதன்படி நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு முதன்மை எழுத்துத்தேர்வுக்கான 300 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கான 40 மதிப்பெண்கள் சேர்த்து 340 மதிப்பெண்கள் வகுக்கப்பட்டு உள்ளது. அனைத்து வகுப்பினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 102 ஆகும். நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு முதன்மை எழுத்துத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். அனைத்து வகுப்பினருக்குமான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும்.
    • மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in எனும் தேர்வாணைய இணையதளத்துக்கு சென்று பார்வையிடலாம்.
Post a Comment (0)
Previous Post Next Post